ெகாரோனா வார்டில் பணியாற்ற 58 புதிய டாக்டர்கள் வருகை
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்ற 58 புதிய டாக்டர்கள் வந்துள்ளனர். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டீன் அறிவுரை கூறினார்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்ற 58 புதிய டாக்டர்கள் வந்துள்ளனர். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து டீன் அறிவுரை கூறினார்.
புதிய டாக்டர்களுக்கு பயிற்சி
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாத நிலை இருந்தது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்த வகையில் குமரி மாவட்டத்திற்கு 60 புதிய டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் 58 டாக்டர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது பணியை தொடங்கினர். முன்னதாக டாக்டர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய டாக்டர்களுக்கு நேற்று ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.
ஆக்சிஜனை கையாள்வது...
மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி தலைமை தாங்கி புதிய டாக்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக பணியில் சேர்ந்துள்ள டாக்டர்கள் முதலில் கொரோனா தொற்றின் வீரியத்தை நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து வைத்துக் கொண்டால் தான் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். அதோடு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு எப்படி ஆக்சிஜன் வழங்குவது என்பதையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆக்சிஜனை பாதுகாப்பாக கையாள்வது மிகவும் முக்கியம் ஆகும்.
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், கொரோனா வார்டை பராமரிப்பது, எந்த மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தேவையான உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.