சிக்பள்ளாப்பூரில் 4-வது முறையாக முழு ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிக்பள்ளாப்பூரில் 4-வது முறையாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லதா அறிவித்து உள்ளார்.

Update: 2021-06-08 19:58 GMT
சிக்பள்ளாப்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிக்பள்ளாப்பூரில் 4-வது முறையாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் லதா அறிவித்து உள்ளார். 

எல்லை மாவட்டம்

கர்நாடகம்-ஆந்திரா மாநில எல்லையில் அமைந்து உள்ளது சிக்பள்ளாப்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் ஆந்திரா, மராட்டியத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா, மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகமானதால் அங்கு வேலை செய்தவர்கள் சிக்பள்ளாப்பூர் நோக்கி வந்தனர். 

இதனால் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது.

2 முழு ஊரடங்கு முடிந்த நிலையில், 3-வது முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகிற 9-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிக்பள்ளாப்பூரில் மீண்டும் 5 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

5 நாட்கள் முழு ஊரடங்கு

இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நகர்புறங்களை காட்டிலும் கிராமப்பகுதிகளில் கொரோ னா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 9-ந் தேதியுடன் முடிய உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது வருகிற 10-ந் தேதி(நாளை) முதல் 14-ந் தேதி வரை 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் சேவைக்கு எந்த தடையும் இல்லை. ஓட்டல்களில் பார்சல்கள் மூலம் உணவு வழங்கலாம். 

மருந்து மற்றும் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலைகளை தவிர்த்து மற்ற அனைத்து தொழிற்சாலைகள், மற்றும் ஆயத்து ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தேவையின்றி சாலைகளில் சுற்றிதிரிபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்