மன்முல் பால் நிறுவன அதிகாரிகள் 6 பேர் பணி இடைநீக்கம்

பாலில் தண்ணீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் மன்முல் பால் நிறுவன அதிகாரிகள் 6 பேரை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய நிர்வாக இயக்குனரை அரசு நியமித்துள்ளது

Update: 2021-06-08 19:55 GMT
மண்டியா:

பாலில் தண்ணீர் கலக்கப்பட்ட விவகாரத்தில் மன்முல் பால் நிறுவன அதிகாரிகள் 6 பேரை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய நிர்வாக இயக்குனரை அரசு நியமித்துள்ளது. 

மன்முல் பால் நிறுவனம்

மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே மண்டியா பால் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடக அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனத்தை சுருக்கமாக மன்முல் என்று அழைத்து வருகிறார்கள். 

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சந்திரசேகர் என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் மன்முல் பால் நிறுவனத்தில் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வரும் ஒப்பந்ததாரர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதாவது விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வேனில் ஏற்றி வரும் பணியை தனியார் ஒப்பந்ததாரர்கள் செய்து வந்துள்ளனர். அவர்கள் தனியாக பாலை பதப்படுத்தி வைக்க குளிரூட்டப்பட்ட 3 குடோன்களை தயார் செய்து வைத்திருந்தனர். 

குடோன்களுக்கு சீல்

பின்னர் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வேனில் ஏற்றி வரும்போது அதில் பாதியளவு திருடிக் கொண்டு தண்ணீரை கலந்துவிடுவதும், இவ்வாறு திருடப்பட்ட பாலை தங்களுக்கு சொந்தமான குடோன்களில் பதுக்கி அதை வெளிமாநிலங்களுக்கு கள்ளத்தனமாக அந்த ஒப்பந்ததாரர்கள் விற்று விடுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது.

 இதற்கு மன்முல் பால் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள்தான் வேனில் வரும் பாலை தரம் பார்த்து உள்ளே அனுமதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தண்ணீர் கலந்த பாலை நிறுவனத்துக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது.

 இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்திய 4 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் 3 குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டன. 

புதிய நிர்வாக இயக்குனர்

இதற்கிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் மன்முல் அதிகாரிகள் 6 பேரை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் போலீசாருக்கு அரசு உத்தரவிட்டு இருக்கிறது. 

இதற்கிடையே மன்முல் பால் நிறுவன நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் 2 மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதனால் மன்முல் பால் நிறுவனத்திற்கு புதிதாக அசோக் என்பவர் நிர்வாக இயக்குனராக நியக்கப்பட்டு உள்ளார். 

இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இவர் கர்நாடக பால் உற்பத்தி கூட்டமைப்பின் வடகர்நாடக மண்டல இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்