தொழில்அதிபர் பாஸ்கர் ஷெட்டி கொலை வழக்கில் மனைவி-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தொழில் அதிபர் பாஸ்கர் ஷெட்டி கொைல வழக்கில் அவருடைய மனைவி-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
மங்களூரு:
தொழில் அதிபர் பாஸ்கர் ஷெட்டி கொைல வழக்கில் அவருடைய மனைவி-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தொழில்அதிபர் கொலை
உடுப்பி மாவட்டம் இந்திராலியை சேர்ந்தவர் பாஸ்கர் ஷெட்டி (வயது 52). தொழில் அதிபர். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார்.
இதுதொடர்பாக ஜூலை 31-ந்தேதி பாஸ்கர்ஷெட்டியின் தாய், மணிப்பால் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாஸ்கர் ஷெட்டி கொலை செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பாஸ்கர் ஷெட்டியின் மனைவி ராஜேஸ்வரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
3 பேர் கைது
அப்போது பாஸ்கர் ஷெட்டியை கொலை செய்ததை ராஜேஸ்வரி ஒப்புக்கொண்டார். இந்த கொலையில் பாஸ்கர் ஷெட்டியின் மகன் நவ்னீத் ஷெட்டிக்கும், அதேப்பகுதியை சேர்ந்த ஜோதிடர் நிரஞ்சன் பட் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், ஜோதிடர் நிரஞ்சன் பட்டுக்கும், பாஸ்கர் ஷெட்டியின் மனைவி ராஜேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பாஸ்கர் ஷெட்டியின் சொத்தை அடைய ஆசைப்பட்டு இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதற்கு பாஸ்கர் ஷெட்டியின் மகன் நவ்னீத் ஷெட்டியும் உடந்தையாக இருந்துள்ளார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து பாஸ்கர் ஷெட்டியை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி தீ வைத்து எரித்து, சாம்பலை ஓம குண்டம் வளர்த்து அதில் போட்டது தெரியவந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதையடுத்து அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உடுப்பி கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக நிரஞ்சன் பட்டுவின் தந்தை சீனிவாஸ் பட் மற்றும் ராகவேந்திரா பட் ஆகிய 2 பேர் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போதே சீனிவாஸ் பட் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மேலும் ராகவேந்திரா பட்டும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மணிப்பால் போலீசார் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உடுப்பி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும் 79 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் சமீபத்தில் ராஜேஸ்வரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நவ்னீத் ஷெட்டிக்கும், நிரஞ்சன் பட்டுக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து பாஸ்கர் ஷெட்டியின் மனைவி ராஜேஸ்வரி, மகன் நவ்னீத் ஷெட்டி, ஜோதிடர் நிரஞ்சன்பட் ஆகியோர் குற்றவாளி என உடுப்பி கோர்ட்டு அறிவித்தது. மேலும் இந்த வழக்கில் ஜூன் 8-ந்தேதி (அதாவது நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று நீதிபதி சுப்பிரமணியா, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தார். ராஜேஸ்வரி, நவ்னீத் ஷெட்டி, நிரஞ்சன்பட் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.