களக்காடு அருகே பள்ளிவாசல் பூட்டை உடைத்து பணம்- பொருட்கள் திருட்டு
களக்காடு அருகே பள்ளிவாசல் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்மநபர் திருடிச் சென்றார்.;
களக்காடு, ஜூன்:
களக்காடு அருகே உள்ள எருக்கலைப்பட்டியில் ஜமாலுதீன் அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவில் அடிக்கடி திருட்டு நடந்தது. இதனைதொடர்ந்து பொதுமக்கள் இரவு நேரங்களில் தர்காவில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர். சம்பவத்தன்று இரவில் இடையன்குளம் முஸ்லிம் தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 74) மற்றும் சிலர் தர்காவிற்கு காவல் பணிக்காக சென்றனர். அப்போது தர்காவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தர்காவிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு அறையில் இருந்து தெற்கு எருக்கலைப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கையில் பணம் மற்றும் பொருட்களுடன் தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் இருட்டில் ஓடி தப்பினார். பின்னர் பொதுமக்கள் தர்காவிற்கு வந்து சோதனையிட்டதில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மின்சாதன பொருட்களும் திருடப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி சாகுல்ஹமீது களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தர்காவில் திருடிய பொருட்களுடன் தப்பி ஓடிய சுரேசை தேடி வருகின்றனர்.