கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவிற்கு பலி

ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவிற்கு பலியானார்.

Update: 2021-06-08 19:13 GMT
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவிற்கு பலியானார்.
கிராம நிர்வாக அதிகாரி
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவர் ஊத்துக்குளி தாலுகாவிற்கு உட்பட்ட மொரட்டுபாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தாமணி (49) என்ற மனைவியும், சாம்வேல்(14) என்ற மகனும் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா   2-ம் அலை வேகமாக பரவி பலர் பலியாகி வந்த நிலையில் நடராஜன் சேவூரில் இருந்து ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக தினமும் வந்துசென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இறுதி வாரத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். இதனையடுத்து தனது குடும்பத்தாருடன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
கொரோனாவிற்கு பலி
இதில் நடராஜனுக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்துஅவர் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 24-ந்தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
ஓரளவு குணமடைந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடராஜன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நாள் முதல் மிகவும் சோர்வாக காணப்பட்ட நடராஜனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு  பலியானார். 
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊத்துக்குளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியான நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஊத்துக்குளி பகுதியில் அடுத்தடுத்து அரசு அதிகாரிகளே பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்