தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை
ராசிபுரத்தில் தலையில் கல்லை போட்டு வேன் டிரைவர், மனைவியை படுகொலை செய்தார்.
ராசிபுரம்
ராசிபுரத்தில் தலையில் கல்லை போட்டு வேன் டிரைவர், மனைவியை படுகொலை செய்தார்.
இந்த பயங்கர கொலை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மனைவி படுகொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனியில் வசித்து வந்தவர் செந்தில் (வயது41). இவருக்கு சங்கீதா (36) என்ற மனைவியும், ராமகிருஷ்ணன் (15), கோபாலகிருஷ்ணன் (11) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். செந்தில் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
கடந்த ஒரு ஆண்டாக கொரோனா ஊரடங்கால் செந்திலுக்கு வேலை எதுவும் இல்லை. இதனால் பண பிரச்சினை இருந்ததாகவும், இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு செந்தில் தனது மனைவி, மகன்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கி உள்ளார். நள்ளிரவு 12.30 மணி அளவில் கண்விழித்த செந்தில், ஒரு பெரிய கல்லை தூக்கி மனைவி சங்கீதாவின் தலையில் போட்டுள்ளார். இதனால் அலறிய சங்கீதா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேேய துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
இந்த சத்தம் கேட்டு மகன் ராமகிருஷ்ணன் எழுந்து பார்த்தபோது, சங்கீதா தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அந்தநேரம் கையில் கல்லுடன் நின்ற செந்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செந்தில் வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர வைத்தது.
இதையடுத்து அவர்கள் மயங்கி கிடந்த செந்திலை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நடந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த செந்திலை கைது செய்தனர். செந்தில் உடல்நிலை சீரான பிறகு போலீசார் அவரை ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது. இதுதொடர்பாக மனைவியிடம் கேட்டதாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்ததாகவும் செந்தில் போலீசாரிடம் கூறியுள்ளார்.
‘பகீர்’ குற்றச்சாட்டு
இதற்கிடையே சங்கீதாவின் அண்ணனும், செந்திலின் மைத்துனருமான செந்தில்குமார் (51) ராசிபுரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், செந்திலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை தனது தங்கை கண்டித்ததால் அவரை செந்தில் கொலை செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டிள்ளார். பணப் பிரச்சினையில் மனைவியை கொலை செய்ததாக செந்தில் போலீசாரிடம் கூறியுள்ள நிலையில் அவருடைய மைத்துனர் கூறிய ‘பகீர்’ குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்திய கல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. மனைவியை கொலை செய்யும் நோக்கத்தில் ஏற்கனவே கல்லை மாடியில் செந்தில் வைத்து இருந்தாரா? திட்டமிட்டுதான் அன்று இரவு மனைவி, பிள்ளைகளை தூங்குவதற்கு மொட்ைட மாடிக்கு அழைத்து சென்றாரா? என பல்வேறு கேள்விகள் போலீசாருக்கு எழுந்துள்ளன.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் வேறு பெண்ணுடன் செந்திலுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அப்படி திட்டமிட்டு மனைவியை கொலை செய்தால் செந்தில் மயங்கி விழ காரணம் என்ன? அவர் உண்மையிலேயே உடல் நலம் சரியில்லாமல் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிய மனைவியை கணவனே த2லையில் கல்லை போட்டு படுகொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.