மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
திருச்சி மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்தனர்.
புதிதாக 490 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 490 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,822 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 8,496 பேர் உள்ளனர். 1,287 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 53,622 ஆகும்.
18 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 18 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் 6 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது.
1,382 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் வீடு திரும்பி வருவதால், படுக்கைகள் அதிக அளவில் காலியாக உள்ளன. தற்போது கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 47 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 897 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 438 என மொத்தம் 1,382 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்த சதீஸ்குமாரின் மனைவி திவ்யா (வயது 26). நிறை மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வாரம் கொேரானா தொற்று உறுதியானதையடுத்து, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் குழந்தையை பெற்றெடுத்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே 2 வயதில் தனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.