திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி முதல் 2-வது தவணை ரூ.2 ஆயிரம், மளிகை பொருட்கள் தொகுப்பு வினியோகம்

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி முதல் கொரோனா 2-வது தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.

Update: 2021-06-08 18:25 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி முதல் கொரோனா 2-வது தவணை நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.

2-வது தவணை

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்க தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நிவாரணம் முதல் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வருகிற 15-ந் தேதி முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் நேற்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 லட்சத்து 12 ஆயிரம் பேர்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 கடைகளுக்கு உட்பட்ட 8,11,990 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் 2-ம் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும்.

அதற்கேற்றவாறு அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலான தினங்களில் அவர்களது ரேஷன் கடைக்குட்பட்ட பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். முற்பகல் வழக்கமான பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

இப்பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடமும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமும் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்