சூறைக்காற்றுடன் திடீரென கொட்டிய கனமழை முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன
கடலூர் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் திடீரென கனமழை பெய்தது. இதில் விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கடலூர்,
வளிமண்டலத்தில் நிலவும் காற்று குவிதல் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது.
சற்று நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. 30 நிமிடம் கொட்டி தீா்த்த கனமழையால் சாலையோர வியாபாரிகள் சிரமப்பட்டனர்.இருப்பினும் கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை அளித்தது.
முருங்கை மரங்கள் சாய்ந்தன
விருத்தாசலம் பகுதியில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதில் விருத்தாசலம் அடுத்த ஆலடி, மணக் கொல்லை, பூண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்யப்பட்டு இருந்த முருங்கை மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன. இதில் சுமார் 10 எக்டர் அளவிலான மரங்கள் சாய்ந்து விழுந்து இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் தற்போது முருங்கை காய்க்கும் தருணத்தில் வேரோடு சாய்ந்து விழுந்து இருப்பது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து மோகன்தாஸ் என்ற விவசாயி கூறுகையில் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்து முருங்கை பயிர் செய்திருந்தேன். தற்போது மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் சூறைக்காற்றில் பெரும்பாலான மரங்கள் சாய்ந்து விழுந்து விட்டன.
கொரோனா ஊரடங்கு என்பதால் வேறு எந்த வேலையும் செய்யாமல் விவசாய வேலையை மட்டுமே பார்த்து வந்த எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புவனகிரி, நெல்லிக்குப்பம்
புவனகிரி பகுதியிலும் நேற்று மாலை மழை பெய்தது. புவனகிரி, கீரப்பாளையம், முட்லூர், கிள்ளை போன்ற பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.இதனால் இந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பாலூர் பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் நகரில் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.குறுவை, சொர்ணவாரி சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.