முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
13 சிங்கங்களுக்கு தொற்று
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா 2-வது அலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு எடுத்துவரும் தீவிர முயற்சியால், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கடந்த 4-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் சிங்கம் பலியானது.
வனவிலங்குகளுக்கு பரிசோதனை
இதேபோல் ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் உத்தரபிரதேசம் எட்டவா ஆகிய இடங்களில் உள்ள சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இந்த சம்பவம் வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள புலிகள் காப்பகம் மற்றும் உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டன.
முதுமலை யானைகள்
இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு முகாமில் நேற்று காலை 8 மணிக்கு வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
வனச்சரகர் தயானந்தன், கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வனத்துறையினர் இணைந்து உதயன், வசிம், பொம்மன், மசினி, இந்தர் உள்பட 28 வளர்ப்பு யானைகளின் துதிக்கையில் இருந்து வரும் சளி மாதிரி களை பாலிதீன் பைகளில் சேகரித்தனர். பின்னர் அவற்றை சோதனை குப்பிகளில் அடைத்தனர்.
மேலும் பின் பகுதியில் பரிசோதனை குழாயை செலுத்தி குடல் பகுதியில் இருந்து மாதிரியை சேகரித்தனர். முன்னதாக வளர்ப்பு யானைகள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சமூக இடைவெளிவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அப்போது பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ அறிக்கை
இதுகுறித்து வனச்சரகர் தயானந்தன் கூறியதாவது:-
முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் (கும்கிகள்) உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைக ளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கை முடிவு வந்த பிறகு துறைரீதியாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தடை
இதனிடையே முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வெளி நபர்கள் நடமாடுவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகன்களுக்கு தடுப்பூசி
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த வாரம் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 28 யானைகளிடம் மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக உத்தரபிரதேசத்தில் இசட் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முதுமலையில் வசிக்கும் பழங்குடியினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வளர்ப்பு யானைகள் முகாமில் பணிபுரியும் 52 பாகன்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் ஊழியர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பின்னரே முகாமுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.