கடைகளை திறக்க அனுமதிக்கப்படாத நிலை; பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு

ராமநாதபுரம் பஜார் பகுதியில் கடைகளை திறக்க விடாமல் அதிகாரிகள் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்

Update: 2021-06-08 18:16 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பஜார் பகுதியில் கடைகளை திறக்க விடாமல் அதிகாரிகள் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
ராமநாதபுரம் மக்களின் ஒட்டுமொத்த மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடமாக அரண்மனை பஜார், சாலைத்தெரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் இருந்துதான் ராமநாதபுரம் பகுதி மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மக்களின் பெரும் பகுதி தேவையை பூர்த்தி செய்யும் பகுதியாக இந்த இடங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பகுதிகளை கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள பகுதியாக கண்டறிந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இந்த பகுதிகளில் குறிப்பாக அரண்மனை, பஜார் பகுதிகள், சாலைத்தெரு, பவுண்டு கடைத்தெரு, வைசியாள் தெரு, பாண்டிக்கண்மாய் தெரு, சென்ட்ரல் கிளாக், மார்க்கெட் ஆகிய பகுதிகளை மொத்த பலசரக்கு கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதி இல்லை என்று நான்குபுறமும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள கடைகளை நம்பித்தான் மக்கள் அனைவரும் உள்ள நிலையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தளர்வில்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் கூட திறந்திருந்த பேக்கரி உள்ளிட்ட கடைகளும் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவதி
இந்த பகுதிகளில் பலசரக்கு கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்டவைகளை திறக்க வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். மொத்த விற்பனை கடைகளிலும் தேவையான பொருட்கள் எழுதி கொடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து வாங்க வருமாறு கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு தளர்வுகளுடன் காலை முதல் மாலை வரை கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையிலும் நகரின் தேவையை நிவர்த்தி செய்யும் பகுதி எது என்பது தெரியாமல் இதுபோன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது வியாபாரிகளை மட்டுமல்லாது பொதுமக்களையும் அவதி அடைய செய்துள்ளது. 
இதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்கும்போது அதற்கு மாற்றாக கேணிக்கரை, புதிய பஸ்நிலையம், வண்டிக்காரத்தெரு பகுதிகளில் தற்காலிகமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் மக்களை அவதிக்குள்ளாக்கியது அனைத்து தரப்பினரையும் வேதனை அடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்