போலீசாருக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்

மணல் திருட்டு, சாராயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை ஒழிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-06-08 17:46 GMT
மயிலாடுதுறை:
மணல் திருட்டு, சாராயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை ஒழிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று புதிய போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங் நியமிக்கப்பட்டார். இவர் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாறுதல் பெற்றுள்ளார். 
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றுக் கொண்ட சுகுணாசிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்பட சிறப்பு கவனம் எடுத்து தேவையானவற்றை கொண்டு வருவேன். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகத்தோடு நின்று விடாமல், பொதுமக்களுக்கு உண்மையான நண்பனாக இருக்கும் வகையில் காவல்துறை செயல்படும். பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
அப்போதுதான் இந்த மாவட்டத்தில் ரவுடியிசம், மணல் திருட்டு, சாராயம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணம் பொதுமக்களுடன் இணைந்து இந்த புதிய மாவட்டத்தில் புதுமை படைக்கும் வகையில் எனது முயற்சி அமையும். பொதுமக்கள் தங்கள் புகார் குறித்து போலீஸ் நிலையங்களில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்