இரவு 8 மணி வரை அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்

திருவண்ணாமலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு தராத நிலையே தொடர்கிறது.;

Update: 2021-06-08 17:07 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு தராத நிலையே தொடர்கிறது.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

கொரோனா தொற்றின் 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் நேற்று முன்தினம் முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் துணிக்கடை, நகைக்கடை, டீ கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளது.

 இதனால் நேற்று முன்தினத்தை விட நேற்று திருவண்ணாமலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டாலும்மக்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் எந்த பயனும் ஏற்படவில்லை. கொரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்கும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 

 உயிரிழப்பு அதிகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அரசு தகவலின்படி 30 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 
இருப்பினும் பெரும்பாலானோர் எவ்வித அச்சமும் இல்லாமல் சாதாரணமாக சாலையில் நடமாடுகின்றனர். முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து செல்வதை காணமுடிகிறது. மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டாலும் இரவு சுமார் 8 மணி வரை மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. 

மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் புரிந்து கொண்டு, நோய் தொற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் அதிகரிக்காமல் இருக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்