ஊரடங்கால் 4 ஆயிரத்து 200 டன் ஏலக்காய்கள் தேக்கம்; விவசாயிகள் வேதனை
தேனி, இடுக்கி மாவட்டங்களில் ஊரடங்கால் விற்பனை பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் 4 ஆயிரத்து 200 டன் ஏலக்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.
போடி (மீனாட்சிபுரம்):
தேனி, இடுக்கி மாவட்டங்களில் ஊரடங்கால் விற்பனை பாதிப்பு மற்றும் விலை வீழ்ச்சியால் 4 ஆயிரத்து 200 டன் ஏலக்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ஏலக்காய் சாகுபடி
நறுமண பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஏலக்காய். இது, தமிழக-கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் தேனி மாவட்டம் போடி, குரங்கணி உள்ளிட்ட மலை பகுதிகளிலும் ஏலக்காய் விளைகிறது. இங்கு விளையும் ஏலக்காய்கள் தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்காக தேனி மாவட்டம் போடியிலும், இடுக்கி மாவட்டம் புத்தடியிலும் இந்திய ஏலக்காய் வாரியத்தின் சார்பில் ஏலக்காய் ஏல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஆன்லைன் மூலம் ஏலக்காய்கள் ஏலம் விடப்படும்.
இதையொட்டி தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஏலக்காய்களை விற்பனைக்காக இந்த 2 மையங்களுக்கு எடுத்து வருவார்கள். அங்கு ஏல விற்பனை அடிப்படையில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும்.
தேக்கம்
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக போடி மற்றும் புத்தடி ஏலக்காய் ஏல மையங்கள் மூடப்பட்டன. இதனால் ஏலக்காய் தோட்டங்களில் விளைந்த. ஏலக்காயை விவசாயிகள் ஏல மையங்களில் பதிந்து விற்பனை செய்ய முடியவில்லை. ஏலக்காய் வியாபாரிகளும் விற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களில் பறிக்கப்பட்ட சுமார் 4 ஆயிரத்து 200 டன் ஏலக்காய்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த தேக்க நிலை காரணமாக ஏலக்காய் விலை வீழ்ச்சியடைந்தது. அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1,200-க்கு விற்ற ஒரு கிலோ ஏலக்காய் ரூ.400 சரிந்து தற்போது ரூ.800-க்கு விற்பனையாகிறது. ஒருபுறம் ஏலக்காய்கள் தேக்கம், மறுபுறம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கவலை
இதேபோல் ஊரடங்கால் ஏலக்காய் ேதாட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இ-பாஸ் கெடுபிடியால் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்கள் வைத்திருக்கும் தேனி மாவட்ட விவசாயிகளால் அங்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏலக்காய் செடிகளை பராமரிப்பு செய்யாததால் செடியிலேயே ஏலக்காய்கள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே கொரோனா ஊரடங்கில் ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய தளர்வுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.