கொரோனா விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடியில் புதிய இணையதள சேவை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதள சேவையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதள சேவையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
புதிய இணையதளம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணைதள சேவையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பொதுமக்கள் stopcoronatuti.in என்ற இணையதளத்தில் தினசரி எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை விவரங்கள், கொரோனா தொற்று விவரங்கள் குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள படுக்கைகள் விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விவரங்கள்
மேலும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு விவரங்கள், தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்கள், காய்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் வார் ரூம் தொடர்பு எண்களும், உதவி மையங்களின் தொடர்பு எண்களும், இலவச தொலைபேசி எண்களையும் இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலக டாக்டர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.