வேலூர் அரசு மருத்துவமனை நர்சு கொரோனாவுக்கு பலி
வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை நர்சு கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்
அரசு மருத்துவமனை நர்சு
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரோன் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது 51). இவர் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார். கொரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாந்தகுமாரி இந்த வார்டில் பணியாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனாவுக்கு பலி
அதையடுத்து அதே மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே 21-ந் தேதி அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு சாந்தகுமாரி உயிரிழந்த சம்பவம் உடன் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.