ஊட்டி நகராட்சியில் தற்காலிக பணியாளர்களுக்கு நேர்காணல்

காய்ச்சல் குறித்து வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த ஊட்டி நகராட்சியில் தற்காலிக பணியாளர்களுக்கு நேர்காணல் நடந்தது.

Update: 2021-06-08 16:45 GMT
ஊட்டி,

காய்ச்சல் குறித்து வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த ஊட்டி நகராட்சியில் தற்காலிக பணியாளர்களுக்கு நேர்காணல் நடந்தது. இதனால் கல்வி சான்றிதழ்களுடன் இளைஞர்கள் குவிந்தனர்.

கணக்கெடுப்பு பணி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் முழுமையாக கணக்கெடுப்பு நடத்துவது சவாலாக உள்ளது. எனவே தற்காலிக பணியாளர்களை நியமிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி ஊட்டி நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரிய தேர்வு செய்வதற்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதை அறிந்த இளைஞர்கள் காலை முதலே தங்களது கல்வி சான்றிதழ்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு வர தொடங்கினர்.

நேர்காணல்

8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை நேர்காணலுக்கு வந்து இருந்தனர். அவர்கள் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்தபடி நின்று இருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, செல்போன் எண், புகைப்படம் போன்ற விவரங்கள் பெறப்பட்டன. 

முதலில் முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

குறிப்பாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறதா, கர்ப்பிணிகள் உள்ளனரா, குழந்தைகள் இருக்கிறார்களா, எத்தனை குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் போன்ற விவரங்களை கணக்கெடுக்கின்றனர். அறிகுறி தென்பட்டால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தற்காலிகமாக நியமனம்

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறுகையில், ஊட்டி நகராட்சியில் கொரோனா குறித்து கணக்கெடுப்பு பணிக்காக தற்காலிகமாக 250 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் நடந்து வருகிறது. நர்சிங், மருத்துவம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் பிற கல்வித்தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கொரோனா காலத்தில் ஒரு மாதம் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு நகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் அரசு மருத்துவமனை, மற்றும் நகராட்சியில் பணிபுரிய அவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்றார்.

மேலும் செய்திகள்