ஒடிசாவில் இருந்து 65.14 டன் ஆக்சிஜன் ரெயிலில் தூத்துக்குடி வந்தது

ஒடிசாவில் இருந்து 65.14 டன் ஆக்சிஜன் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தது.

Update: 2021-06-08 16:40 GMT
தூத்துக்குடி:
ஒடிசாவில் இருந்து 65.14 டன் ஆக்சிஜன் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தது. 

கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முழுவீச்சில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் இருந்து ஏற்கனவே 5 லாரிகளுடன் 78.82 டன் ஆக்சிஜன் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.

ஆக்சிஜன் ரெயில்

தற்போது 2-வது முறையாக ஒடிசாவில் இருந்து 5 ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகளுடன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு தூத்துக்குடி மீளவிட்டானுக்கு வந்தது. இந்த ரெயிலில் மொத்தம் 65.14 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில், ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் மதுரை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 12.98 டன்னும், தேனி மாவட்டத்துக்கு 8.12 டன்னும், சிவகங்கை மாவட்டத்துக்கு 7.34 டன்னும், ராமநாதபுரத்துக்கு 5 டன்னும், தனியார் நிறுவனங்களுக்கு 31.7 டன்னும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு லாரியுடனும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பாக சென்றனர்.

மேலும் செய்திகள்