உத்தமபாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது

உத்தமபாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.;

Update: 2021-06-08 16:32 GMT
உத்தமபாளையம்:
கம்பத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). ஆட்டோ டிரைவர் இவர் நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி என்ற இடத்தில் அந்த ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. 
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி, முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. ஆட்டோவும் சாலையோரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ டிரைவரும், லாரி டிரைவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது விபத்தில் சிக்கி காயமடைந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் மற்றும் லாரி டிரைவரான கம்பம்மெட்டுவை சேர்ந்த ஆபேஸ் (41) ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த லாரியில் ஏற்றி சென்றது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. சின்னமனூர் பகுதியில் இருந்து 50 கிலோ எடையுள்ள 60 அரிசி மூட்டைகளை லாரியில் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்