தலைவால் அருவியில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையால், தலைவால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில், கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
அதன்படி நேற்று காலை முதலே நகர் பகுதியில் மேக கூட்டம் தரையிறங்கிய நிலையில், பிற்பகல் 1.30 மணி முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து 2½ மணி நேரம் மழை நீடித்தது. பல இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
நகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
கனமழை எதிரொலியாக, கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்சார வயர்கள் மீது மரக்கிளைகள் விழுந்தன. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மரக்கிளைகளை அகற்றி மின்சார வினியோகத்தை சீரமைத்தனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் நட்சத்திர ஏரியில் இருந்து, அதிக அளவில் உபரிநீர் வெளியேறுவதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே உள்ள தலைவால் அருவியில், வெள்ளியை வார்த்து ஊற்றியதை போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் எழிமிகு காட்சி கண்களை கொள்ளை கொள்ள செய்கிறது.
மேலும் கொடைக்கானலில், இதயத்தை வருடும் இதமான குளிர்ந்த வானிலையே நிலவியது.