குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்
வேடசந்தூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள மண்டபம்புதூரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பூத்தாம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலை விரிவாக்கப்பணிக்காக தோண்டியபோது, மண்டபம்புதூரில் இருந்து பூத்தாம்பட்டி வரை குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
இதன்காரணமாக கடந்த 20 நாட்களாக பூத்தாம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்ட ஒப்பந்தகாரரிடம், குழாய் உடைப்பை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தினர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், ஸ்ரீராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் மண்டபம்புதூருக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் சாலை விரிவாக்க பணிக்காக நடைபெற்ற பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
குடிநீர் குழாயை சீரமைத்த பிறகு, பாலம் கட்டும்பணியில் ஈடுபட வலியுறுத்தி திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் 2 நாட்களில் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.