தியாகராயநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட தியாகராயநகர் பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டம், சிறப்பு திட்டங்கள், பாலங்கள், பேருந்து சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, தியாகராய சாலை மற்றும் தணிகாச்சலம் சாலை சந்திப்பில் சீர்மிகு நகரத் திட்ட நிதியின் கீழ் ரூ.40.79 கோடியில் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் அடுக்குமாடி வாகன நிறுத்த மையத்தையும், மிதிவண்டி பகிர்மானத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பைக் மற்றும் பேட்டரி இணைப்புடன் கூடிய இ-பைக் வாகனங்களையும் பார்வையிட்டார்.தொடர்ந்து, தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேற்கு மாம்பலம் ரெயில் நிலையம் வரை ரூ.28.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, ஜி.என்.செட்டி சாலையில் புதுப்பிக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய், புதிய இணைப்பு வடிகால்வாய்களையும் அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது மத்திய வட்டார இணை கமிஷனர் பி.என்.ஸ்ரீதர், துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி உட்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சளி, காய்ச்சலுக்கு சுயமாக மருந்து வாங்குபவர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிப்பது குறித்து மருந்தகங்களின் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் துணை கமிஷனர்(சுகாதாரம்) டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், மாநில மருந்து கண்காணிப்பு அலுவலர் சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.