இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று திரும்பிய 2 பேர் கைது

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்த 2 பேரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-08 10:23 GMT
ஏமன் நாட்டுக்கு சென்றவர்கள்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சாா்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட்டு மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.அப்போது ராமநாதபுரத்தை சோ்ந்த சுல்தான் முகமது (வயது 55), மதுரையை சோ்ந்த சுடா்மணி (33) ஆகிய 2 பேரின் பாஸ்போா்ட்டுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் 2 பேரும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏமன் நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 
வேலைக்காக சாா்ஜாவுக்கு சென்றனர். அங்கிருந்து இந்திய அரசின் அனுமதி இன்றி, தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்றதும், பின்னர் ஏமனில் இருந்து சாா்ஜா வழியாக சென்னை திரும்பி உள்ளதும் தெரியவந்தது.

2 பேர் கைது
இது தொடர்பாக 2 பேரிடம் நடத்திய விசாரணையில், “எங்களுக்கு ஏமன் தடை செய்யப்பட்ட நாடு என்பது தெரியாது. நாங்கள் வேலை செய்த நிறுவனம் தான் எங்களை சில மாதங்கள் ஏமனில் வேலை செய்யும்படி அனுப்பி வைத்தது” என்று கூறினா். இதையடுத்து 2 பேரையும் குடியுரிமை அதிகாரிகள், மேல் நடவடிக்கைகக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். விமான நிலைய போலீசாா் சுல்தான் முகமது, சுடா்மணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் செய்திகள்