வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
கமிஷனர் ஆய்வு செய்தார்
சென்னையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இ-பதிவு பெற்று வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஓடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று மாலை சென்னை விருகம்பாக்கம், வடபழனி சிக்னல் சந்திப்பு, காசி தியேட்டர் சந்திப்பு போன்ற பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாகன சோதனை
சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. வாகனங்கள் நெரிசல் இல்லாமல் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலையில் அத்தியாவசிய பணிக்காக செல்லும் வாகனங்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தடை இல்லாமல் போகலாம். இதர வாகனங்கள் மட்டும் சோதனை போடப்படும். சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்கள் செல்ல தனி பாதை உரிய தடுப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை ஓய்வு கொடுக்கப்படும். அந்த போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சை கொடுக்க ரோந்து வாகனங்களில் டாக்டர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒத்துழைக்க வேண்டும்
வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். போலீசாரிடம் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகன சோதனையின்போது பொதுமக்களிடம் மென்மையான முறையில் செயல்பட வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப்.பில் போலீசாரை தாக்கியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.