அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்: கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் அரசு கூடுதல் முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அரசு கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரிசோதனை
கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசும் போது கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா தொற்று கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சளி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். எவ்வித உயிரிழப்பும் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
தொற்று அறிகுறியுடன் தனியார் கிளினிக்குகள், மருந்தகங்களுக்கு வருபவர்கள் விவரங்களை பெற்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அரசின் அறிவிப்பின்படி 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
தேவையான நடவடிக்கை
நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப் படுத்துவதுடன் அவர்களை தொடர்ந்து கண்காணித்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் அசோக்குமார், மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரக நாத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.