மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி திறந்து வைக்கிறார் மேட்டூர் அணையில் ஆயத்த பணிகள் தீவிரம் கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார்
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார்.;
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்து நேரில் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இதனால் அணையை திறப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அணையை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அணையின் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், டெல்டா பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முக்கிய பகுதிகளில் ஆய்வு
முன்னதாக மேட்டூர் அணைக்கு வந்த கலெக்டர் அணையின் 16 கண் பாலம், இடது கரை, வலது கரை, கவர்னர் பாயிண்ட், பவளவிழா கோபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி, சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜினீயர் ஜெயகோபால், மேட்டூர் சப்-கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
முன்னதாக மேட்டூர் வந்த கலெக்டர் கார்மேகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை மேட்டூர் நிர்வாக என்ஜினீயர் தேவராஜ், அணை பிரிவு உதவி என்ஜினீயர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆஸ்பத்திரியில் ஆய்வு
தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் மேட்டூர் நகராட்சி தினசரி மார்க்கெட் காய்கறி கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மேட்டூர் சப்-கலெக்டர் சரவணன், மேட்டூர் நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் ஷா ஆகியோர் சென்றனர்.