ஆத்தூரில் பரபரப்பு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி இ-பாஸ் வாங்கி காரில் சாராயம் கடத்தல் சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்
ஆத்தூரில் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி இ-பாஸ் வாங்கி காரில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூரில் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி இ-பாஸ் வாங்கி காரில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
சாராயம் கடத்துவதாக தகவல்
சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகருக்கு, கொத்தாம்பாடி பகுதியில் ஒரு காரில் சாராயம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் சாதாரண உடையில் அந்த சாலையில் ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
திடுக்கிடும் தகவல்
போலீசார் விசாரணையில் அந்த நபர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் சரவணன் (வயது 26) என்பதும், காரில் சாராயம் கடத்தியதும் தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சாராயம் கடத்துவதற்காக இ-பாஸ் வாங்கி இருப்பது தெரிய வந்தது.
அதாவது, ஆத்தூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு காரில் செல்வதாக கூறி ராசிபுரத்தில் இ-பாஸ்க்கு பதிவு செய்துள்ளார். அதன்படி அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. அந்த இ-பாஸ் சான்றை காரின் முன்பக்கம் ஒட்டிக்கொண்டு கொத்தாம்பாடி மெயின் ரோடு வழியாக ஆத்தூருக்கு சென்ற போது போலீசாரிடம் சிக்கினார்.
200 லிட்டர் சாராயம் பறிமுதல்
ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் இருந்து 200 லிட்டர் சாராயம் விற்பனைக்காக வாங்கி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சரவணனை போலீசார் கைது செய்ததுடன், 200 லிட்டர் சாராயம் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி இ-பாஸ் வாங்கி காரில் சாராயம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.