காய்கறி மார்க்கெட் செயல்பட நடவடிக்கை தேவை
விருதுநகரில் மாவட்ட நிர்வாக உத்தரவுக்கு முரணாக காய்கறி மார்க்கெட்டைமெயின் பஜாரில் செயல்பட நகராட்சி நிர்வாகம் அனுமதித்தநிலையில் நோய் பரவல் ஏற்படும் நிலை உள்ளதால் காய்கறி மார்க்கெட்டை ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் மாவட்ட நிர்வாக உத்தரவுக்கு முரணாக காய்கறி மார்க்கெட்டைமெயின் பஜாரில் செயல்பட நகராட்சி நிர்வாகம் அனுமதித்தநிலையில் நோய் பரவல் ஏற்படும் நிலை உள்ளதால் காய்கறி மார்க்கெட்டை ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ள இடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காய்கறி மார்க்கெட்
மாவட்டத்தில் நோய் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விருதுநகர் காய்கறி மார்க்கெட் மெயின் பஜாரில் செயல்பட்டு வந்த நிலையில் அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வாய்ப்பில்லாததாலும், கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததாலும் காய்கறி மார்க்கெட் அங்கிருந்து பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் செயல்பட ஊரடங்குக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஊரடங்குக்கு முன்பு குறிப்பிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த நிலையில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காய்கறி மார்க்கெட் செயல்படவில்லை.
தகவல் தாமதம்
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தளர்வுகள்அமலுக்கு வந்த நிலையில் காய்கறி மார்க்கெட் ஏற்கனவே முழு ஊரடங்குக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் நேற்று காய்கறி மார்க்கெட் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடத்தில் செயல்படாமல் மெயின் பஜாரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகம் அனுமதித்தது ஏன்? என்று தெரியவில்லை.
இது பற்றி நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரியிடம் கேட்டபோது, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து தாமதமாக தகவல் வந்ததால் காய்கறி வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்க இயலாதநிலை ஏற்பட்டதாகவும் அதனால் காய்கறி வியாபாரிகள் காய்கறி மார்க்கெட்டில் விற்பனையை தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
அவசியம்
எனினும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி அனுமதித்த இடங்களில் காய்கறி மார்க்கெட் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
நோய் பரவலை தவிர்ப்பதற்காகவே சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு வசதியாக காய்கறி மார்க்கெட்டை குறிப்பிட்ட இடங்களில் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
எனவே நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. காய்கறி விற்பனையாளர்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும்.