தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்; வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சுரண்டை, ஜூன்:
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆலோசனை கூட்டம்
சுரண்டை நகரப்பஞ்சாயத்து கூட்ட அரங்கத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். வீீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரப்பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் வெங்கடகோபு வரவேற்றார்.
கூட்டத்தில், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி கடைகளை திறக்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்து பொதுமக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் ஜேக்கப், நுகர்பொருள் சங்க நிர்வாகிகள் மாடசாமி, சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் சேர்மசெல்வம் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
கடையம்- சிவகிரி
கடையம் யூனியன் அலுவலகத்தில் வியாபாரி சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா தலைமை தாங்கினார். ஆணையாளர் முருகையா, வட்டார மருத்துவ அலுவலர் பழனி குமார், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், பரமசிவன், வருவாய் ஆய்வாளர்கள் மனோகரன், அமுதா, கடையம் வட்டார அனைத்து வியாபாரி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிலையில் உரிய அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு கண்காணிப்பு குழு அலுவலரும், துணை ஆட்சியருமான சிவகுமார் தலைமை தாங்கினார். சிவகிரி தாசில்தார் (பொறுப்பு) திருமலைச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வக்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருத்தப்பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் சண்முகத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் நிர்வாக அதிகாரிகள் அரசப்பன் மோகன மாரியம்மாள் சுதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.