இளநீரை திருடி விற்ற வாலிபர் கைது

பெங்களூருவில் இளநீரை திருடி விற்ற வாலிபர் கைது;

Update: 2021-06-07 20:06 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் வைத்து இளநீரை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். அதுபோல், பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் பல்வேறு சாலைகளில் வியாபாரிகள் தள்ளுவண்டியில் வைத்து இளநீர் விற்று வருகின்றனர். இரவு நேரத்தில் இளநீரை சாலையோரமே வியாபாரிகள் வைத்துவிட்டு செல்வது வழக்கம். 

இவ்வாறு வைக்கப்படும் இளநீர் தொடர்ந்து திருட்டுப்போனது. மல்லசந்திரா, ஜாலஹள்ளி கிராஸ், தாசரஹள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் இளநீர் திருட்டுப்போனது. இதுதொடர்பாக வியாபாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.


இந்த நிலையில், பாகலகுன்டே பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த இளநீரை சரக்கு ஆட்டோவில் வந்து திருட முயன்ற வாலிபரை, வியாபாரிகளே சுற்றி வளைத்து பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். மற்றொருவர் சரக்கு ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

 போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் மடிவாளாவை சேர்ந்த மோகன் (வயது 27) என்று தெரிந்தது. 

அவரிடம் இருந்து சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மோகன் தனது நண்பருடன் சேர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநீரை திருடி விற்று வந்தது தெரியவந்தது. தலைமறைவாகி விட்ட மோகனின் நண்பரை பாகலகுன்டே போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்