முதல் மந்திரி மாற்றம் குறித்த பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டும்
முதல்-மந்திரி மாற்றம் குறித்த பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தினார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி மாற்றம் குறித்த பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் வலியுறுத்தினார்.
எடியூரப்பாவே முதல்-மந்திரி
முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் இனி ஆட்சி தலைமை மாற்றம் குறித்த பேச்சே எழக்கூடாது. இதுகுறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களிடம் பேச எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர்.
மீதமுள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பாவே முதல்-மந்திரி பதவியில் நீடிக்க வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றம் குறித்த பேச்சுக்கு கடிவாளம் போட வேண்டியது அவசியம்.
நம்பிக்கை உள்ளது
இதுகுறித்து பா.ஜனதா மேலிடம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். எடியூரப்பா தலைமை மீது எங்கள் கட்சி மேலிடத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது.
எடியூரப்பாவை நம்பியே வேறு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தனர். அவர்களுக்கும் எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது.
எடியூரப்பா போராட்டங்கள் மூலம் உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். மக்களின் கஷ்டங்களுக்காக போராடியவர். எடியூரப்பாவுக்காக மக்கள் அதிக வாக்குகளை பா.ஜனதாவுக்கு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை இல்லாதபோதும், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்தவர் எடியூரப்பா.
ஓய்வு எடுக்கவில்லை
எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு, தொடர்ந்து இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வருகிறார். ஒரு நாள் கூட அவர் ஓய்வு எடுக்கவில்லை. கொரோனா நெருக்கடி காலத்தில் அவர் ஒரு நாளைக்கு 5, 6 கூட்டங்களை நடத்துகிறார்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.