2-வது முறையாக கொரோனா பாதித்த பெண் தற்கொலை
கதக்கில் சிகிச்சை மையத்தில் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
கதக்கில் சிகிச்சை மையத்தில் 2-வது முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெண் தற்கொலை
கதக் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரோகிணி (வயது 48). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் ரோகிணிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நகரில் அரசால் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ரோகிணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் உள்ள ஜன்னலில் துணியால் தூக்குப்போட்டு ரோகிணி தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து சக நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2-வது முறையாக கொரோனா
தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து ரோகிணியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது ரோகிணிக்கு இதற்கு முன்பும் ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததும், அதில் இருந்து அவர் மீண்டு வந்திருந்ததும் தெரிந்தது. தற்போது அவருக்கு 2 முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்.
இந்த முறையும் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருந்தார். இதன் காரணமாக ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வதாக டாக்டர்களும் ரோகிணியிடம் தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் கொரோனா காரணமாக மனம் உடைந்த ரோகிணி சிகிச்சை மையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.