மதுரையில் ஒரே நாளில் 401 பேருக்கு மட்டுமே கொரோனா
மதுரையில் ஒரே நாளில் 401 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுபோல், 1164 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.
மதுரை,
மதுரையில் ஒரே நாளில் 401 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுபோல், 1164 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்.
கொரோனா வைரஸ்
மதுரையை பொறுத்தமட்டிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு1500 -க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு இறங்கு முகமாக மாறி இருக்கிறது. அதில் நேற்று ஒரே நாளில் 401 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 9 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 401 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 185 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 68 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது.
1164 பேர் குணம் அடைந்தனர்
இதுபோல், நேற்று 1164 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 880 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் அனைவரும் தொடர்ந்து 7 நாட்களுக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள் என அதிகாரி தெரிவித்தனர்.
நேற்றுடன் மதுரையில், இதுவரை 56 ஆயிரத்து 677 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 666 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
8 பேர் பலி
மதுரையை சேர்ந்த 39, 33 வயது ஆண்கள், 76, 65, 62, 72 வயது முதியவர்கள், 55, 93 வயது பெண்கள் ஆகியோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பாதிப்புடன், வேறு சில நோய் பாதிப்பு இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது மதுரை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடித்து, நோய் பாதிப்பு மேலும் குறைய தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவத் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.