சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பேரூராட்சியின் 13-வது வார்டுக்குட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் பொதுமக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் மோட்டார் பழுதானதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்வது பாதிக்கப்பட்டது. இதனால் அவதி அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திரண்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்த அலுவலர்கள் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.