கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தொற்று பாதித்த மற்றொருவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

Update: 2021-06-07 18:31 GMT
கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தொற்று பாதித்த மற்றொருவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். 

இந்த பரிதாப சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரா நகரை சேர்ந்தவர் பெரியசாமி என்ற ஜெயசீலன் (வயது 63), விவசாயி. இவருடைய முதல் மனைவி கருப்பாயி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 

கருத்து வேறுபாடு காரணமாக பெரியசாமி தனது மனைவியைப் பிரிந்து கோவை மதுக்கரையில் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறிய அவர் நாகர்கோவிலை சேர்ந்த மேரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டதால் பெரியசாமி பல்லடத்தில் தனியாக வாழ்ந்து வந்தார்.

கொரோனா பாதிப்பு

சில நாட்களுக்கு முன்பு பெரியசாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை மகன் சிவக்குமார் (37) கவனித்து வந்ததாகத் தெரிகிறது. 

இந்த நிலையில், மனைவிகளை பிரிந்த துக்கம், கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் மனதளவில் பெரியசாமி கடுமையாக பாதிக்கப் பட்டார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளானார். 

கழுத்தை அறுத்து தற்கொலை

எனவே தற்கொலை செய்ய முடிவு செய்த அவர்,  வார்டில் உள்ள படுக்கையில் இருந்தபடியே ஒரு கத்தியை எடுத்து தனது கழுத்து மற்றும் கைகளை தனக்குத்தானே அறுத்துக்கொண்டார். 

இதனால் ரத்தம் அதிகளவில் வெளியேறியது. இதை பார்த்ததும் அருகில் உள்ள நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டரை அழைத்து வந்தனர். 

டாக்டரும் வந்து பெரியசாமியை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை 

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

கொரோனா சிகிச்சையில்இருக்கும் ஒருவர் தனக்குதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மற்றொருவர் தற்கொலை 

கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே- அவுட்டை சேர்ந்தவர் ராமசாமி (58). இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

 இதையடுத்து அவர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்கள்.கொரோனா காரணமாக ராமசாமி மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் கொரோனா காரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்