10 பேருக்கு கொரோனா தொற்று: தர்மபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் கலெக்டர் ஆய்வு-பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தல்
தர்மபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அந்த பகுதியை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
கொரோனா வைரஸ்
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கவுண்டர் தெருவில் 4 குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதன்காரணமாக அண்ணாமலை கவுண்டர் தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக தர்மபுரி நகராட்சி அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தர்மபுரி நகராட்சி சார்பில் அந்த தெருவில் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்படைந்தவர்களின் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதனிடையே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட அண்ணாமலை கவுண்டர் தெருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினி நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த பகுதியில் மேலும் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொற்று இல்லாதவர்களை வெளியே செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கலெக்டர், குறைந்தது 10 நாட்களாவது இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு நகராட்சி ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
உத்தரவு
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண், நகராட்சி அலுவலக தொலைபேசி எண் மற்றும் இந்த பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர்களின் தொலைபேசி எண்கள் எழுதி வைக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, தாசில்தார் ரமேஷ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.