குமரியில் 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய கடைகள் திறப்பு
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன.;
நாகர்கோவில்:
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் பயனாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. அத்துடன் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
அதன்படி குமரி மாவட்டத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 வாரங்களுக்கு பிறகு நேற்று காலை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள், பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் திறக்கப்பட்டன.
மக்கள் கூட்டம்
வீடுகளில் முடங்கி இருந்த பொதுமக்கள் நேற்று வெளியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். நாகர்கோவில் மாநகராட்சியில் வடசேரி, மீனாட்சிபுரம், ராமன்புதூர் உள்ளிட்ட இடங்களில் தனியாக செயல்படுகின்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டன. அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மீன் சந்தைகள், இறைச்சி கூடங்களில் மொத்த விற்பனை மட்டும் நடந்தது. அனைத்து கடைகளிலும் கடைக்காரர்கள் முக கவசம் அணிந்து வியாபாரம் செய்தனர். இதே போல கிராமப்புறங்களிலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
அதே நேரத்தில் கோட்டார் மார்க்கெட், வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தை, அப்டா மார்க்கெட் போன்றவை திறக்கப்படவில்லை. ஆனால் நடமாடும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக அப்டா மார்கெட், வடசேரி மற்றும் கோட்டார் மார்க்கெட்டில் இரவில் மொத்த வியாபாரம் நடந்தது.
ஆட்டோக்கள் ஓடின
இதுபோக டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் 4 வாரங்களுக்கு பிறகு நேற்று ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின. மேலும் மாவட்டம் முழுவதும் மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரம் பழுது நீக்குபவர்கள் இ-பதிவு செய்து தங்களது வேலைகளை பார்த்தனர். அதோடு மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தக கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் 4 வாரங்களுக்கு பிறகு நேற்று செயல்பட்டன.
சார் பதிவாளர் அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டு பணிகள் நடந்தது. தினமும் 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக சார் பதிவாளர் அலுவலகம் வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 2 வாரங்களுக்கு பிறகு அத்தியாவசிய கடைகளும், 4 வாரங்களுக்கு பிறகு பிற கடைகளும் செயல்பட்டதோடு ஆட்டோக்களும் ஓடியதால் குமரி மாவட்டம் பரபரப்பாக காணப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதை தொடர்ந்து தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் பலரது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.