தடைக்காலம் முடிந்தாலும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம்
ஊரடங்கு காலம் என்பதால் படகுகளை பழுது பார்க்க முடியவில்லை. எனவே தடைக்காலம் முடிந்தாலும் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்
ராமநாதபுரம்
ஊரடங்கு காலம் என்பதால் படகுகளை பழுது பார்க்க முடியவில்லை. எனவே தடைக்காலம் முடிந்தாலும் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதன்படி கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் தொடங்கிய இந்த தடைகாலம் வரும் 15-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீன்துறை துணை இயக்குனர் இளம்வழுதி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-
தடைக்காலம் முடிவடைய இன்னும் ஒருவார காலம்தான் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் படகுகளை பழுதுபார்க்கவோ, வலைகளை சரி செய்யவோ முடியவில்லை. எனவே, தடைக்காலத்தினை 2 வார காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். படகுகள் தயாராக இல்லாத நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் கடலுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் கடலுக்கு செல்லும்போது எங்களுக்கு அரசு வழங்கும் மானிய டீசல் வழங்க வேண்டும். மேலும் தற்போது 1800 லிட்டர் டீசல் தான் மானியமாக வழங்குகிறது. இதனை 4 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். இறால் உள்ளிட்ட மீன்களை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இதனால் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு நியாயமான விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாக்குவாதம்
அப்போது தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாக சிறைபிடிக்கப்பட்ட 43 படகுகளை விடுவித்து டீசல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சில மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உருவானது.
மேலும் மண்டபம் கடல் பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த தூண்டில் வளைவு, மீன்களை இறக்கி ஏலமிட இறங்குதளம், வடகடல் பகுதியை ஆழப்படுத்தி இருபுறமும் சோலார் விளக்கு அமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக அளித்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விடுவிக்க முடியாது
இதைதொடர்ந்து மீன்துறை உதவி இயக்குனர் பரிதிஇளம்வழுதி கூறும்போது, மீன்பிடி தடைக்காலம் 14-ந் தேதி முடிந்ததும் கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கடலுக்கு செல்லலாம். டீசல் மானியம், கூடுதல் டீசல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிக்கவோ, டீசல் மானியம் வழங்கவோ விதிகளின்படி முடியாது என்றார்.