மின்மாற்றி பழுதடைந்ததால் இருளில் மூழ்கிய கிராமம்
மூங்கில்துறைப்பட்டு அருகே மின்மாற்றி பழுதடைந்ததால் இருளில் மூழ்கிய கிராமம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருக்கோவிலூர் சாலையில் உள்ள மின்மாற்றியில் இருந்து மங்கலம் கிராமத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த மின்மாற்றி பழுதடைந்ததால் மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெசின், குளிர்சாதன எந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த முடியாமல் மங்கலம் கிராம மக்கள் கடும் அவதிஅடைந்து வருகின்றனர். குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பிரச்சினையும் உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் கிராமம் இருள்சூழ்ந்து காணப்படுவதால் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், வெளிச்சத்துக்காக மண்எண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாகவும், தற்போது கோடைக்காலமாக இருப்பதால் இரவு நேரங்களில் புழுக்கத்தால் தூக்கமின்றி சிரமப்பட்டு வருவதாகவும், இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே கிராம மக்களின் நலன் கருதி பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து மின்சார வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடு்த்து வருகின்றனர்.