200 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் 200 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.;

Update: 2021-06-07 17:39 GMT
ஊட்டி,

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் 200 வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வாகனங்கள் மூலம்...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து வியாபாரிகள், தன்னார்வலர்கள் வீட்டிற்கே கொண்டு சென்று விற்பனை செய்தனர். இதில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் சூழ்நிலை இருந்தது.

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி

இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வார்டுகள் மற்றும் வீடுகள் வாரியாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமில் வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 200 டோக்கன்கள் வழங்கப்பட்டது. 

அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆதார் எண் போன்ற விவரங்கள் கோவின் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. 

முன்னதாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை உள்ளதா என்று சுகாதார குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆவின் பாலகங்களில் பணிபுரியும் விற்பனையாளர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இருப்பு இல்லை

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நேற்று 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் மற்ற மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்