500 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவேக்சின் தடுப்பூசிகள் 500 எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Update: 2021-06-07 17:35 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கோவேக்சின் தடுப்பூசிகள் 500 எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் 2-வது தவணைக்காக காத்திருப்பவர்களுக்கு போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு முகாம்களில் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவ துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், ஏப்ரல் மாதம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மே மாதம் முதல் அரசின் உத்தரவின்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் மாவட்டத்தில் தடுப்பூசி முடிவடையும் தருவாயில் இருந்த நிலையில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகளில் கடந்த வாரம் ராமநாதபுரத்திற்கு 4 ஆயிரத்து 500 வந்தது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் போடப்பட்டு விட்டது. இதைதொடர்ந்து தடுப்பூசிகள் காலியாகி யாருக்கும் தடுப்பூசி போடப்படாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக முன்பதிவு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு ஒதுக்கீடு செய்த பின்னர்தான் தடுப்பூசி போடும்பணி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 500 தடுப்பூசி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.
2-வது தவணை
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி தெரிவித்ததாவது:- 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 500 கோவேக்சின் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 100, ராமநாதபுரம் நகர் பகுதிகளுக்கு 100, திருப்புல்லாணி வட்டாரத்திற்கு, மண்டபம் வட்டாரத்திற்கு தலா 100, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு, தொண்டி வட்டாரத்திற்கு தலா 50 என மொத்தம் 500 தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. 
இந்த தடுப்பூசிகள் 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்களுக்கு போடப்படும். அடுத்தபடியாக ராமநாதபரம் மாவட்டத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் அரசின் வழிகாட்டுதலின்படி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதிக இறப்பை பார்த்து அச்சமடைந்து தற்போதுதான் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்