அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திடீர் பணி நீக்கம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் போராட்டம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே கூடுவெளி சாவடி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக சுமார் 14 பேர் பணி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் தற்காலிக தொகுப்பூதிய விரிவுரையாளர்களை சில நாட்களுக்கு முன்பு, பணிக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளது.
நேற்று காலை 14 தற்காலிக தொகுப்பூதிய விரிவுரையாளர்கள், சிதம்பரத்தில் உள்ள முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கூடுவெளிசாவடி பாலிடெக்னிக் கல்லூரியின் நிர்வாக அலுவலகம் முன்பு வந்தனர். தொடர்ந்து அங்கு அவர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன வேதனை
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் தொகுப்பூதிய விரிவுரையாளராக பணியாற்றி வந்தோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது உங்கள் பணியை நீங்கள் தொடர வேண்டாம், உங்களை பணிநீக்கம் செய்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த பணியை நம்பி தான் எங்களது குடும்பம் உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் எங்களை பணிநீக்கம் செய்தது மிகுந்த மன வேதனையை தருகிறது.
எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை தொகுப்பூதிய விரிவுரையாளராக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.