கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Update: 2021-06-07 17:06 GMT
திருப்பூர்
கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் மருத்துவமனைக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
தனியார் மருத்துவமனை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தொற்றிலிருந்து குணமடைய அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இலவசமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மருத்துவ சேவைகளை செயல்படுத்தி வருகிறது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரித்து அதிதீவிர மற்றும் அதி தீவிரமில்லாத தொற்றுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சைக்கு ஏற்படும் செலவுகளை மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு அரசு மருத்துவரின் பரிந்துரைப்படிவம் இனி தேவையில்லை என அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை
தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் உதவி இல்லாத சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு ரூ.5 ஆயிரமும், ஏ 1 மற்றும் ஏ2 தரவரிசையில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரூ.7,500-ம், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு நாளொன்றுக்கு ரூ.15,000 அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வகை சிகிச்சைக்கு ரூ.30,000, ஆக்சிசன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரமும் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும். தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்