வேப்பூர் அருகே மரத்தில் மினிலாரி மோதி விவசாயி சாவு
வேப்பூர் அருகே மரத்தில் மினிலாரி மோதி விவசாயி உயிாிழந்தாா்.
வேப்பூர்,
வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராமசாமி. விவசாயி. மினிலாரியில் எள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு எடுத்து சென்றார்.
மினிலாரியை பெரியநெசலூர் கிராமத்தில் தங்கி விவாசயம் செய்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பழனிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் மூட்டைகளை கொண்டு சென்று இறக்கி வைத்து விட்டு மீண்டும் மினிலாரியில் வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
என். நாரையூர் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாடடை இழந்த மினிலாரி சாலையோரமாக இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பழனிவேல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.