அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறப்பு
ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி
ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 24-ந்தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊரடங்கின் பயனாக கொரோனா பாதிப்பு குறைந்தது.
இதை தொடர்ந்து தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கத்தினர் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கடைகள் செயல்படும் என்று அறிவித்தனர்.
கடைகள் திறப்பு
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று பொள்ளாச்சி பகுதியில் நேற்று வழக்கம் போல் மளிகை, காய்கறி மற்றும் பழக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்கால் வெறிச்சோடி கிடந்த சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.
பொள்ளாச்சி சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கடைகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை.
கூட்டம், கூட்டமாக நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
போக்குவரத்து நெருக்கடி
மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதியில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தப்படி கடைகள் மதியம் 2 மணிக்கு மூடப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரங்களுக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டன.