சொட்டு நீர்ப்பாசனத்தில் காலிபிளவர் சாகுபடி

உடுமலை பகுதியில் சொட்டு நீர்ப்பாசனத்தில் காலிபிளவர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Update: 2021-06-07 16:22 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் சொட்டு நீர்ப்பாசனத்தில் காலிபிளவர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலைப்பிரதேச பயிர்கள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு தக்காளி, சின்ன வெங்காயம், கத்தரி, பீட்ரூட் உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஒருசில விவசாயிகள் மலைப் பிரதேசங்களில் பயிரிடக் கூடிய காலிபிளவர், முட்டைக்கோஸ் போன்ற பயிர்களைப் பயிரிட்டு கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் உடுமலை பகுதியில் சொட்டு நீர்ப்பாசனத்தில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-
காலிபிளவர் சாகுபடி
பொதுவாக காலிபிளவர் சாகுபடிக்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும். இப்பகுதியின் பருவநிலை ஓரளவு அதற்கு உகந்ததாக உள்ளதால் காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். பொதுவாக காலிபிளவர் பனிக்காலங்களில் சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் தரக்கூடியதாக உள்ளது. அந்தவகையில் கார்த்திகை மாதத்தில் பயிர் செய்து தை மாதத்தில் அறுவடை செய்வது சிறந்ததாகும்.
ஆனால் எல்லோரும் பயிரிடும் பருவத்தில் பயிரிட்டால் வரத்து அதிகரித்து குறைந்த விலைக்கே விற்பனையாகும். எனவே சவாலான பருவத்தில் பயிர் செய்யும் போது மகசூல் சற்று குறைந்தாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது சாகுபடி மேற்கொண்டுள்ளோம்.
பராமரிப்பு அவசியம்
அதேநேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து காலிபிளவர் சாகுபடி மேற்கொண்டுள்ளோம். ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்யலாம். நட்ட 60 நாட்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும். அதில் சிறிதளவு சேதம் ஏற்பட்டாலும். 80 நாட்களில் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பூக்களை அறுவடை செய்ய முடியும்.
மொத்தத்தில் 3 மாதத்தில் முத்தான வருவாய் தரக்கூடிய பயிராக காலிபிளவர் இருக்கும்.ஆனால் காலிபிளவர் சாகுபடியைப் பொறுத்தவரை அனுபவ விவசாயிகள் அல்லது தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனை பெற்று அதன்படி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.பராமரிப்பில் சற்று அலட்சியம் காட்டினாலும் கைகொடுக்க வேண்டிய காலிபிளவர் சாகுபடி காலி பண்ணி விடும்'
இவ்வாறு விவசாயி கூறினார்.

மேலும் செய்திகள்