வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்
வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.;
மயிலாடுதுறை:-
வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
3 போகம் நெல் சாகுபடி
காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் 3 போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம். உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், நெல் சாகுபடி 2 போகமாக குறைந்தது.
நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாக்களில் மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவு செய்தல், நாற்றங்கால் அமைத்தல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணை திறப்பு
நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது 97 அடியாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் உள்ள நிலையில், வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
நடப்பு ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்து உள்ளதாக வேளாண்மைத்துறை அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்காக பாய் நாற்றங்கால் அமைத்து எந்திரம் மூலம் நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோரிக்கை
குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக விவசாயக்கடன் தள்ளுபடி, சிறப்புத்தொகுப்பு திட்டங்களை அறிவித்து, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வாய்க்கால்களில் மண்டி உள்ள புதர்களை அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.