கொள்ளிடம் அருகே, தோட்டத்திலேயே வீணாகும் காய்கறிகள் கொரோனாவுக்கு பயந்து விற்பனையை நிறுத்திய விவசாயி
கொள்ளிடம் அருகே கொரோனாவுக்கு பயந்து தோட்டப்பயிர் விவசாயி, காய்கறி விற்பனையை நிறுத்தினார்.
கொள்ளிடம்:-
கொள்ளிடம் அருகே கொரோனாவுக்கு பயந்து தோட்டப்பயிர் விவசாயி, காய்கறி விற்பனையை நிறுத்தினார்.
காய்கறி சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி, வழுதலைகுடி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் கத்திரி, வெண்டை, புடலை, பாகல், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, பீர்க்கங்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகள் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், இந்த பகுதியில் விளையும் காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும். எனவே பொதுமக்கள் காய்கறிகளை தேடி வந்து வாங்கி செல்வர். ஆனால் தற்போது நிலைமை மாறி காய்கறிகள் விற்பனை இன்றி சேதமடைந்து. வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அழுகும் நிலை
இதுகுறித்து வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி நந்தீஸ்வரன் கூறுகையில், தோட்டக்கலை துறையின் மூலம் விதைகள் வாங்கி ஒவ்வொரு ஆண்டும் காய்கறி சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகள் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு காய்கறிகள் அனைத்தும் விற்கப்படாமல் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று அதன்படி தரமாகவும், முறையாகவும் பயிரிட்டு வருவதால் இந்த காய்கறிகளை விரும்பி வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
விற்பனைக்கு எடுத்து செல்ல...
இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக காய்கறிகளை தேடிவந்து வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. அரசு தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய வாய்ப்பளித்துள்ள நிைலயில், கொள்ளிடம் தோட்டக்கலை துறை அதிகாரிகளும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்திருந்தனர்.
ஆனால் எங்கு பார்த்தாலும் கொரோனா பரவலாக இருந்து வருவதால் விற்பனைக்கு எடுத்து செல்ல விரும்பவில்லை. மேலும் அனைத்து காய்கறிகளும் நான்கில் ஒரு பங்கு கூட விற்பனையாகவில்லை.
இந்த நிலையில் காய்கறிகளை வெளியில் சென்று விற்க பயமாக உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் பெரும் சிரமம் ஏற்பட்டுவிடும். எனவே காய்கறிகளை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்.
கொரோனாவில் இருந்து...
இதனால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் தோட்டத்திலேயே வீணாகி வருகின்றன. ஆண்டுதோறும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் பெரும் வாய்ப்பு இருந்து வந்தது. இந்த ஆண்டு நேரில் சென்று விற்பனை செய்தால் அசல் கிடைப்பதே சிரமமாகும். எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், என்னையும் எனது குடும்பத்தையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதே இந்த ஆண்டு எனக்கு பெரும் லாபமாகும் என்றார்.