கிராமப்புறங்களில் மருத்துவ காப்பீடு திட்ட சேர்க்கை முகாம் அரசுக்கு மக்கள் கோரிக்கை
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்ட சேர்க்கை முகாம்களை நடத்தவேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
திருக்கனூர்,
பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஒரு வருடத்துக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. புதுவை அரசு கடந்த 13.01.2021 அன்று இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் காப்பீடு அட்டை வழங்க அனுமதிக்கப்பட்டது.
இதில் விடுபட்ட சிவப்பு நிற குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவசமாக பதிவு செய்ய தற்போது முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, மகாத்மா காந்தி பல் மருத்துவ நிறுவனம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம், மண்ணாடிப்பட்டு, திருநள்ளாறு ஆகிய சமுதாய சுகாதார மையங்களில் வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, செட்டிபட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக விடுபட்ட சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிவு செய்யப்பட்டு அட்டை வழங்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பொது சேவை மையங்களில் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது. தற்போது நகர பகுதிகளில் 4 இடங்களில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் கிராமப்புற மக்கள் புதுச்சேரி நகர பகுதிக்கு சென்று வருவதே இயலாததாக உள்ளது. கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது சேவை மையங்கள் மூலமாகவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.